- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு
சிபிசிஎல் நிறுவனத்தால் ஏற்பட்ட கொசஸ்தலை ஆற்றின் எண்ணெய் கசிவை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த பசுமை தீர்ப்பாயம்.

Author: Santhosh Raj KM
Published: December 9, 2023
சென்னை எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மழை நீரில் எண்ணெய் கழிவு கலந்தது தொடர்பாக நேற்று (டிசம்பர் 08) தாமாக முன் வந்து தேசிய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 4 ம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. சாதாரண பருவமழை காலத்திலே சென்னையின் முக்கிய பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு நிலை பாதிக்கப்படும். இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் நகரத்தின் முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. ஒரு சில இடங்களில் மழை நீர் வடித்து விட்டாலும் இன்னும் ஒருசில நகர பகுதிகளில் மழைநீர் வடியாமல், மின்சாரம் இல்லாமல், உணவு, தண்ணீர் சரியாக கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை, திருவள்ளூரில் பெய்யும் கனமழைக்கு வடிகாலாக செயல்படுவது கொசஸ்தலை ஆறுதான். அதிக அளவு மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. புழல் ஏரியிலும் உபரி நீர் திறக்கபட்டதால் வடசென்னையின் எண்ணூர், மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்திருக்கிறது. இந்த பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிறுவனங்கள் மழைநீரை வெளியேற்றும் போது அத்துடன் கச்சா எண்ணெய்யும் வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்ததால் குடியிருப்புகளுள் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்கள். கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது என்றும் எரியும் தன்மை கொண்டதால் வீடுகளில் சமைக்கவே அச்சப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறார்கள். கச்சா எண்ணெய் கடலிலும் கலந்திருக்கிறது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(CPCL) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்ட போது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளம் நிறுவனத்தை சூழ்ந்ததையடுத்து அதையும் வெளியேற்றியிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கச்சா எண்ணெய்யும் சேர்ந்து வெளியேறியுள்ளது.
குடியிருப்புகள், ஆறு, கடலிலும் எண்ணெய் கலந்திருப்பதால் மக்கள் அவதிப்படுவது, நீர்நிலைகள் மாசுபடுவது, மீன் வளம் பாதிக்கப்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து எண்ணெய் கசிவு தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையில் நேற்று (டிசம்பர் 8) தொடங்கியது.