தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Wednesday, May 21, 2025 | India
Home / இந்தியா

அமெரிக்க அறிக்கைகளும்… கெளதம் அதானியின் சந்தை நிலவரமும்...

அமெரிக்க வழக்கறிஞர்கள் குழுவானது, அதானி நிறுவனம் மீது லஞ்ச புகார் குறித்த குற்றசாட்டை முன்வைத்ததை அடுத்து அதானி நிறுவனம் மற்றும் அதில் முதலீடு செய்த மற்ற நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு சரிந்தது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 22, 2024

இந்திய பங்குசந்தையே அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு அறிக்கையால் சற்று ஆட்டம் கண்டது என்றே கூறவேண்டும். அதில் அதானி குழுமமும், அதில் முதலீடு செய்து லாபத்தை நோக்கி காத்திருந்த பெரு நிறுவனங்களும் லட்ச கணக்கில் கோடிகளை இழந்து சரிந்து நிற்கிறது. இந்த வீழ்ச்சி எப்போது மீண்டு(ம்) எழும் நினைப்பதற்குள் அடுத்தடுத்த அடியாக சர்வதேச சந்தைகளிலும் அதானி குழுமம் சரிவை சந்தித்து வருகிறது . 

முன்னதாக ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அப்போது பங்குகளின் விலையை உயர்த்தி காண்பிக்க அதானி குழுமம், இந்திய பங்குசந்தையான SEBI தலைவர் மதாபி பூரி புச் உடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தது. அதனால், அதானி குழுமத்தின் பங்குகள் பெருமாமளவு சரிந்தன. அப்போது இந்திய பங்குசந்தையும் சரிவை கண்டது. 

தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த முறை முன்பை விட அதிகமான அளவில் சரிவை சந்தித்தது அதானி குழுமம் மற்றும் அதில் முதலீடு செய்த நிறுவனங்கள். இம்முறை புயலை கிளப்பியது அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு. 

சூரிய சக்தி மின்சாரம் திட்ட ஒப்பந்தங்களில் அதானி குழுமம் முறைகேடாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1000 கோடி) அளவில் லஞ்சம் கொடுத்தது என்றும், இதனை கொண்டு சர்வதேச சந்தைகளில் முதலீடுகளை ஈர்க்க அதானி குழுமம் முயற்சிக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கும்படி குற்றசாட்டை கூறி இதனை அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்காகவும் தாக்கல் செய்துள்ளது அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு. 

இந்த விளைவாக, அதானி குழும சொத்து மதிப்பில் இதுவரையில் (நவம்பர் 21 நிலவரப்படி) சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. 10 சதவீதம் அளவுக்கு அதானி பங்குகள் (நவம்பர் 21) சரிவு ஏற்பட்டது. 

‘உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்டாய்’ என்பது போல அதானி குழுமத்தில் முதலீடு செய்த LIC போன்ற பெரு நிறுவனங்கள் பெருமளவில் சரிவை சந்தித்தன. LIC நிறுவனம் மட்டுமே (நவம்பர் 21) சுமார் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. ஐசிஐசிஐ, ஆக்சிஸ், இண்டஸ்லேண்ட், ஐடிஎப்சி போன்ற பெரு நிதி நிறுவனங்களும் சரிவை சந்தித்தன. 

இந்த குற்றசாட்டுகள், சரிவுகளை அடுத்து அதானி குழுமம் , வழக்கம் போல, இந்த குற்றசாட்டு பொய்யானது, இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என அறிக்கை விட்டு கூறினாலும், தற்போதைக்கு அமெரிக்காவில் முதலீட்டுக்காக கடன் பத்திரங்களை வெளியிடப்போவதில்லை என முடிவு எடுத்துவிட்டது.  

இந்த விவகாரங்களை கண்ட கென்யா அரசு, அதானி குழுமத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. அந்நாடு, அதானி குழுமத்துடன்  சுமார் ரூ.5900 கோடி அளவில்  விமான நிலையங்கள் விரிவாக்கம், மின்சார திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஒப்பந்தம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, கென்யாவை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிலும் அதானி குழுமம் சரிவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இனவெறி பாகுபாடு பார்ப்பதாகவும், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை பழங்குடியின மக்களுக்கு அனுமதி மறுப்பதாகவும் , அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையத்தில் அதானி நிறுவனம் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 21இல், அதானி நிறுவனமும், இந்திய பங்குசந்தையும் இவ்வாறு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டாலும், நவம்பர் 22இல் பங்குசந்தையானது ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. அதே போல அதானி நிறுவன பங்குகளும் ஏற்றத்தை கண்டுள்ளது.

Tags:SensexStock MarketUSAAdani GroupAdani

No comments yet.

Leave a Comment