தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

பங்குசந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா அதானி விவகாரம்? பொருளாதார வல்லுனரின் கருத்துக்கள்

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரபட்டுள்ள வழக்கு இந்திய பங்குச்சந்தையை பாதிக்க கூடும் என பொருளாதர ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 23, 2024

கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச் சந்தைகளில், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், சென்செக்ஸ் இந்த வார்த்தைகளை விட கௌதம் அதானியின் பெயர்தான் அதிக ஒலித்தது. அவர் மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, அதன் தாக்கம், அதானி நிறுவனங்கள் மீது மற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடுகளின் ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டவை பற்றிய பேச்சுக்கள் தலைப்புச் செய்திகளாக உலா வந்தன. 

அதானி குழுமம் மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க்நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், இந்திய பங்குச்சந்தையில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2 ஆயிரம் கோடி அளவில் லஞ்சம் கொடுத்து உள்ளனர் என்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அமெரிக்க நீதிமன்றத்தில், இந்திய தொழிலதிபர் குறித்து வழக்கு தொடர முடியுமா? பங்குச் சந்தையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொருளாதர ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். 

அவர் கூறுகையில், அதானி சூரிய மின்சக்தி குழுமம், 2021இல் பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 250 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக 6 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,  அதானி சோலார் எனர்ஜி, அசூர் பவர் (Azure power) என 2 அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்கள், அதானி நிறுவனத்தை சேர்ந்த 2 தனி நபர்கள், ஒரு பிரெஞ்சுகாரர், ஒரு ஆஸ்திரேலிய நபர் ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபர் மீது வழக்கு தொடர முடியுமா என்றால் , முடியும், அதற்கு அந்த நிறுவனம், அமெரிக்காவில் முதலீடு பெற்று இருக்க வேண்டும், இல்லையென்றால் அமெரிக்காவில் கடன் பத்திரம் வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில், அந்த நிறுவனம் வெளிநாட்டில் குற்றங்கள் செய்தால் அது பற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்.  

இதன் அடிப்படையில், அதானி நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதானி நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 175 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்க முதலீட்டாளர்களே கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. 

2021லேயே இந்த தவறு நடந்துள்ளது. இதனை அதானி நிறுவனம் முன்கூட்டியே அமெரிக்க அரசாங்கத்திடம் சொல்லி இருந்தால், அல்லது தெரிந்து இருந்தால், அந்த நிறுவனம் தற்போது கடன் முதலீடுகளை பெற்றிருக்க முடியாது. அப்போதே தடை செய்திருப்பார்கள். ஆனால், அதனை மறைத்ததன் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், இந்திய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் லஞ்சம் கொடுத்த விவகாரம், அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திற்கு தெரிந்து அவர்கள் வழக்கு தொடர்கிறார்கள் என்றால், இங்குள்ள பங்குச் சந்தை மேலாண்மை கட்டுப்பாட்டுஅமைப்பான SEBI , CBI, அமலாக்கத்துறை (ED) இவையெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இவர்களை, அதானி மீது விசாரணை செய்யவிடாமல் யார் தான் தடுத்து நிறுத்துகிறார்கள்?

எல்ஐசி ஒரு பொதுத்துறை நிறுவனம். அந்த நிறுவனம் அதானி நிறுவனத்தின் மீது முதலீடு செய்துள்ளது. அதன் காரணமாக சுமார் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு இழந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? எல்ஐசி நிறுவனம் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய எந்த அரசு அதிகாரி சம்மதித்தார்?

இந்தியாவில் மட்டுமல்ல வங்கதேசம், இலங்கை, கென்யா உள்ளிட்ட நாடுகளிலும் அதானி நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இந்திய அரசு தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதானி குழுமத்தால் எல்ஐசி மட்டும் சரிவை சந்திக்கவில்லை. ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஐடிஎப்சி, போன்ற நிதி நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளன. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி மட்டுமே நாம் எடுக்க வேண்டும். அதில் முதலீடு செய்யக்கூடாது. முதலீடு வேறு, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது வேறு. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இன்னும் சில நாட்களில் பங்குச்சந்தை சற்று உயர்ந்து காணப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் அதானி நிறுவனத்தினால் இந்திய பங்குச் சந்தைகள் சற்று சரிவை சந்திக்கும் என பொருளாதார வல்லுனர் ஆனந்த் சீனிவாசன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

அவர் கூறியது போலவே, நவம்பர் 22, வார இறுதி நாளில் பங்குச்சந்தையானது சற்று உயர்ந்து காணப்பட்டது. மேலும் அதானி நிறுவன பங்குகளும் உயரத் தொடங்கின. பங்குச்சந்தை மொத்த முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு பங்குகள் உயர்ந்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை நிலவரங்கள் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 

Tags:USASensexAdani GroupAdaniSEBI