- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? தற்போதைய தகவல்கள் இதோ…
டிசம்பர் 12, 2024ஆம் தேதியுடன் RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author: Kanal Tamil Desk
Published: November 26, 2024
நமது நாட்டின் நாணய கொள்கையை உருவாக்குதல், வட்டி விகிதத்தை முறைப்படுத்துதல், நிதி அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல், அரசின் கடன் நிர்வாகத்தை கண்காணித்தல், அரசு வங்கியாக செயல்படுதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுதல் ஆகியவற்றில் முக்கிய பணிகளை செய்கிறது மத்திய ரிசர்வ் வங்கி (RBI-Reserve Bank Of India).
கிட்டத்தட்ட நமது நாட்டின் நிதி மேலாண்மையை கட்டுப்படுத்தும் துறையாக செயல்படும் இந்த ரிசர்வ் வங்கியின் தலைமை பொறுப்பு என்பது மிக முக்கிய பொறுப்பாகும். இந்த தலைமை பொறுப்புக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவர் நியமிக்கப்படுவார்.
கடந்த 2018 டிசம்பர் மாதம் வரையில் பொறுப்பில் இருந்த டாக்டர் உர்ஜித் படேல் விலகியதை அடுத்து, டிசம்பர் 12, 2018இல் ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார். இவரது பதவிகாலம் 2021 டிசம்பர் 12இல் நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து முதல் முறையாக சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்ட்டது. அதன்படி, வரும் டிசம்பர் 12ஆம் தேதியுடன் அவரது பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து அவரது பதவி காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.
67வயதான சக்திகாந்த தாஸுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என கடந்த நவம்பர் 18ஆம் தேதியே ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவல்களும் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. மீண்டும் சக்திகாந்த தாஸ் பதவி காலம் நீட்டிக்கப்படும் என்றும், ஆனால், இந்த முறை 3 ஆண்டுகள் நீட்டிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் அமைச்சரவையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நியமனக் குழு (ACC - Appointments Committee of the Cabinet) இதற்கான அறிவிப்பை முன்னரே அறிவித்து இருக்கும். ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் இந்த நீட்டிப்பு குறித்த தகவல்கள் தாமதமாகியுள்ளது என்றும், அடுத்த ஒரு வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பு இருக்கலாம் என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சக்திகாந்த தாஸ் :
இப்படியான சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலக குடியிருப்பில் தங்கியுள்ளார். இவர் நவம்பர் 25 அன்று, இரவு சாப்பிட்ட உணவு ஓவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்செரிச்சல் (Acidity) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, அவருக்கு மூத்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். தற்போது நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 26இல் அவர் டிஸ்சார்க் செய்யப்பட்டார்.