டிசம்பர் மாதத்தில் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்! EPFO முதல் ஆதார் புதுப்பித்தல் வரை
2024-ம் ஆண்டு இறுதியில் (டிசம்பர்) அரசு மற்றும் பொதுத்துறை அமைப்புகள் சார்பில் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: December 2, 2024
2024ஆம் ஆண்டு இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த மாதம் (டிசம்பர்) 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை அமைப்புகள் அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சிலிண்டர் விலை :
இந்த மாற்றம் மாதந்தோறும் 1ஆம் தேதி புதுப்பிக்கப்படும். சர்வதேச சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிக்கப்பட்டு ரூ.1980.50ஆகி உள்ளது. இதற்கு முன்னர் ரூ.1,964.50ஆக இருந்தது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818ஆக உள்ளது.
TRAI விதிமுறை :
இம்மாதம் (டிசம்பர்) முதல் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பட்டு அமைப்பான TRAI, தொலைபேசி மெசேஜ் மூலம் வரும் மோசடிகளை (SPAM) தடுக்கும் பொருட்டு அனைத்து மெசேஜ்களையும் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது நவம்பர் மாதம் அமலுக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. அதனை அடுத்து, இந்த மாதம் முதல் புதிய கண்காணிப்பு விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறையால் OTP செயல்பாட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது என TRAI கூறியுள்ளது.
EPFO விதிமுறைகள் :
EPFO புதிய விதிமுறைகளின்படி, பயனர்கள் தங்கள் UAN நம்பருடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்த டிசம்பர் மாதத்திற்குள் இதனை இணைக்க வேண்டும் என்றும் அப்போது தான் மத்திய அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகையான ELI திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்-பான் இணைப்பு :
பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க வேண்டும். தனிநபர் பொருளாதர நடவடிக்கைகளை கண்காணிக்க ஆதார் - பான் எண் இணைப்பு கட்டாயமாகும்.
ஆதார் சமையல் எரிவாயு :
இம்மாதம் முதல் சமையல் எரிவாயு வாங்குவோர் தங்கள் கியாஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அப்டேட் இலவச கால அவகாசம் :
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க UIDAI வழங்கிய கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரை ஒரு முறை கூட புதுப்பிக்காதவர்கள் தங்கள், புகைப்படம், முகவரி உள்ளிட்டவற்றை ஆதார் மையங்களில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம். டிசம்பர் 14க்கு பிறகு இதற்கு கட்டணம் விதிக்கப்படும்.
மாலத்தீவு சுற்றுலா பயணிகளுக்கு…
மாலத்தீவு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எக்ஸிட் பாஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரணமான வகுப்பு கட்டணம் ரூ.2,532இல் இருந்து ரூ.4,220ஆகவும், வணிக வகுப்பு கட்டணம் ரூ.5,064இல் இருந்து ரூ.10,129ஆகவும், முதல் வகுப்பு கட்டணம் ரூ.20,257ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் :
ஜூலை 31க்கு பின் வருமானவரி தாக்கல் செய்ய தவறியவர்கள், டிசம்பர் 31க்குள் அபராதத்துடன் தாக்கல் செய்யலாம். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், ரூ.5 லட்சத்திற்கு குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கடப்படும் என வருமானவரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments yet.