- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மக்களவையில் நிறைவேறிய வங்கி சட்டத்திருத்த மசோதா 2024 : முக்கிய அம்சங்கள்
வங்கி சட்டங்கள் திருத்த மசோதா 2024-ஐ மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 3ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Author: Kanal Tamil Desk
Published: December 5, 2024
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது வங்கி சட்டத்திருத்த மசோதா 2024 நாடாளுமன்ற அவைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, டிசம்பர் 3ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இச்சட்டத் திருத்தத்தை மக்களவையில் தாக்கல் செய்தார்.
நோக்கம் :
இந்தசட்டதிருத்தங்கள் மூலம், வங்கி துறையின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தவும் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்படுவதாக நிதியமைச்சர் மக்களவையில் குறிப்பிட்டார்.
இந்த சட்டதிருத்தத்தில், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கி சட்டம் 1955 உள்ளிட்ட சட்டங்களில் பிரதானமாக 19 திருத்தங்களை கொண்டுள்ளது என நிதியமைச்சர் மக்களவையில் கூறினார்.
முக்கிய திருத்தங்கள் :
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளுக்கு நான்கு நபர்களை நாமினிகளாக பரிந்துரைக்கலாம். இதன் மூலம் வடிக்கையாளார்கள் பயன்பெறுவர்.
உரிமை கோரப்படாத வங்கி கணக்கு தொகைகள், பங்குகள், பத்திரங்கள் ஆகியவற்றை மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் IEPF (Investor Education and Protection Fund) எனும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என சட்டத்திருத்தம் கூறுகிறது.
கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் அல்லது தலைவர்களின் பதவிக்காலம் 8 முதல்10 ஆண்டுகள் வரை அதிகரிக்கும்.
மத்திய கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் மாநில கூட்டுறவு வங்கிகளின் வாரியங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
இனி வங்கிகள் ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் கடைசி நாளில் தங்கள் நிர்வாக அறிக்கைகளை சமர்ப்பிக்கும். இதற்கு முன்பு இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் இவை தாக்கல் செய்யப்பட்டு வந்தது .
வங்கியின் சட்டப்பூர்வ தணிக்கையாளர் ஊதியத்தை அந்தந்த வங்கி நிர்வாகமே தீர்மானித்து கொள்ளலாம்.
வங்கிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டு பொதுத்துறை வங்கிகளுக்குள் தணிக்கை செயல்முறையை மேம்படுத்துவதில் இச்சட்ட திருத்தம் கவனம் செலுத்துகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை :
மேற்கண்டவாறு, வங்கி சட்டத்திருத்த மசோதா 2024-ல் பல்வேறு முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளில் ஒன்றான மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதனை அடுத்து மாநிலங்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றம் செய்யப்பட்ட பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று சட்டத்திருத்தம் அமலுக்கு கொண்டுவரப்படும்.