- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வரி பிடித்தம் விவகாரம் : வங்கி மேலாளரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்!
TDS வரி பிடித்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளரை வாடிக்கையாளர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: December 9, 2024
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வஸ்திராப்பூரில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஜெய்மின் ராவல் என்பவர் வடிக்கையாளராக உள்ளார். இவரது நிலையான வைப்பு (FD) தொகையில் இருந்து TDS வரிப்பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுபற்றி, வங்கி மேலாளரிடம் வாடிக்கையாளர் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர், TDS பிடித்தம் செய்யப்பட்ட வரித்தொகையானது வருமானவரி தாக்கல் செய்யும் போது கழித்துக்கொள்ளப்படும். அல்லது வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதனை கண்டுகொள்ளாத வாடிக்கையாளர் வங்கி மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார்.
வாடிக்கையாளர் ஒருவர் வங்கி ஊழியரை தாக்கும் வீடீயோவை வங்கி ஊழியர் சங்கம் (UFBU - Union Forum of Bank Unions) தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய நிதித்துறை இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு சட்டம் தேவைப்படுகிறது என்றும் வலியுறுத்தி பதிவிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வஸ்த்ராபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் ஜெய்மின் ராவல் மீது சட்டப்பிரிவு 115-2 (ஒருவரை காயப்படுத்துதல்), 221 ( ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல்) மற்றும் 296 (ஆபாசமான வார்த்தைகளை பேசுதல்) உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்,
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நாளிலேயே (டிசம்பர் 5) ஜெய்மின் ராவல் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் வஸ்த்ராபூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எல்.எல்.சாவ்தா தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
TDS வரி என்பது என்ன?
TDS (Tax Deducted at Source) என்பது மூலதான வரி கழிப்பு எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, வருமான வரி சட்டப்பிரிவின் கீழ், வருமான வரி செலுத்துவோரின் கணக்கில் இருந்து முன்கூட்டியே வரி சேகரிக்கும் முறையாகும்.
இந்த முறைப்படி வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டால், வருமான வரி தாக்கல் செய்யும் போது, TDS வரி பிடித்தத்தை சுட்டிக்காட்டி அந்த தொகையை திருப்பி எடுத்து கொள்ளலாம். அல்லது அவர் செலுத்தும் வரித்தொகையில் இருந்து கழித்து கொள்ளலாம் என்பது வருமானவரித்துறை விதிமுறையாகும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தடுக்கப்படுகிறது. தாமதமாக வரி செலுத்துதல் ஆகியவை தடுக்கப்டுகிறது.
இந்தியாவில் அங்கங்கே வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் என்பது அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதனை முழுதாக தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.