தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

அதிகரிக்கும் டிஜிட்டல் பண மோசடிகள் : NPCI கூறும் பாதுகாப்பு அறிவுரைகள்

ஆன்லைன் பணமோசடியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மையம் (NPCI) சில அறிவுரைகளை கூறியுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 22, 2024

இன்றயை காலகட்டத்தில் முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் வாயிலாக மிரட்டி பணமோசடி செய்வது மிகவும் இயல்பான விஷயமாக மாற்றிவிட்டது. இக்குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகளை முழுவதுமாக சரி செய்ய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

டிஜிட்டல் கைது : 

‘டிஜிட்டல் கைது’ மோசடி என்பது மிகவும் நுட்பமான சைபர் குற்றமாகும். இதில் குற்றவாளிகள் தங்களை, அரசு அதிகாரிகள் எனக்கூறி நடித்து, பொதுமக்களுக்கு பயத்தை உண்டாக்கி அவர்களிடம் இருந்து பணத்தை திருடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

எவ்வாறு நடக்கிறது? 

இந்த மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் தாங்கள், காவல்துறை, வருமான வரித்துறை (Income Tax), அல்லது மத்திய புலனாய்வுத்துறை (CBI) என ஏதேனும் அரசு உயர் அதிகாரிகளாக அடையாளப்படுத்தி கொள்கின்றனர். அதன்பிறகு "நீங்கள் மிகப்பெரிய சட்டவிரோத குற்ற செயல்கள் தொடர்பான மோசடியில் ஈடுபட்டுள்ளீர்கள்" அல்லது "உங்கள் பெயர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் உள்ளது" என்று பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். 

இதனால் நாங்கள் "உங்களை கைது செய்வோம்" அல்லது "உங்கள் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்" என்று குற்றவாளிகள் பொதுமக்களை பயமுறுத்துவர். அவர்கள் நம்பவில்லை என்றால் மேலும் பயமுறுத்த வீடியோ அழைப்புகளில் போலியாக அதிகாரி உடைகள் அணிந்து கூட பேசுவார்கள் . சில சமயம் போலி காவல்நிலையம் போன்ற அமைப்பை கூட காண்பிப்பார்கள்.

உங்களின் மீதான குற்ற விவகாரங்களை சரி செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு பணம் செலுத்துமாறு கேட்பர். சில நேரங்களில் உங்கள் வங்கி விவரங்கள், ஆதார், பான் எண்கள், OTP போன்ற தகவல்களையும் கேட்பார்கள். பலரும் இப்படி பேசியவுடன் பயந்து மொபைல் OTP சொல்லிய பிறகு அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் ஆன்லைன் வழியாக திருடப்பட்டுவிடும். 

இது போன்ற சம்பவங்களில் இருந்து நாம் தப்பிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கட்டுப்பாடு மையம் (NPCI) சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதனைப்பற்றி கிழே பார்ப்போம். 

NPCI-யின் பாதுகாப்பு அறிவுரைகள்

 தெரியாத அழைப்புகளை தவிர்க்கவும் :

  • திடீரென மேலே குறிப்பிட்டது போல வரும் அழைப்புகளை எடுத்த பிறகு இது மோசடி என்பதை உறுதி செய்தால் அதனை தவிர்த்திடுங்கள். எந்த வங்கியும் உங்கள் முக்கிய விவரங்களை போனில் கேட்க மாட்டார்கள். 

நேரில் அழைக்க வேண்டும் :

  • எந்த நபரும் உங்களிடம் பணம் செலுத்த சொல்லி மிரட்டினால், அதற்கு பயந்து உடனடியாக நீங்கள் பயப்படவேண்டாம். முதலில் தெளிவாக பேசி அவர்களை நேரில் வரவழைக்க முயற்சி செய்யுங்கள். 

 எதையும் பகிரக்கூடாது 

  • வங்கி விவரங்கள், OTP, பாஸ்வேர்டுகள், அல்லது தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
  • உண்மையான சட்ட அமைப்புகள் (காவல்துறை, வரித்துறை) இதுபோன்ற தகவல்களை போனில் கேட்க மாட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 

 நம்பகமான ஆதாரங்கள் மூலம் சரிபார்க்கவும் :

  • உங்கள் வங்கி, NPCI, அல்லது அரசு அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்திஅவர்களை அந்த வழியில் தொடர்பு கொள்ள முயற்சியுங்கள்.

 மிரட்டல்களால் பயப்படாதீர்கள் :

  • மோசடியாளர்கள் உங்களை பயப்பட வைத்துப் பயன்படுத்த முயற்சி செய்வார்கள். உண்மையான அதிகாரிகள் நிச்சயமாக உங்களை மிரட்ட மாட்டார்கள். எதுவேண்டுமானாலும் நேரடியாக வரச்சொல்லியோ , அல்லது நேரில் வந்து தான் நடவடிக்கை எடுப்பார்கள். பணமோசடி செய்பவர்கள் தான் இப்படியான செயல்களில் ஈடுபடுவார்கள்.

மோசடிக்குள் சிக்கியால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு வேளை நீங்கள் மோசடி சம்பவத்தில் சிக்கிவிட்டிர்கள் உங்களுடைய பணம் மோசடி செய்யப்பட்டது என்றால் நீங்கள் உடனடியாக செய்யவேண்டிய விஷயங்கள் பற்றிய தகவலையும் NPCI கொடுத்துள்ளது. 

வங்கியுடன் உடனடி தொடர்பு கொள்ளவும்:

உங்களுடைய பணம் மோசடி செய்யப்பட்டு விட்டது என்றால் நீங்கள் உடனடியாக உங்கள் கணக்குகளை முடக்கி, மோசடியை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்படி வங்கியை அணுகவும். 

புகார் செய்யவும் :

இந்திய அரசின் சைபர் குற்ற மையம் அல்லது காவல்துறையில் முறைப்படி புகார் பதிவு செய்யுங்கள்.

NPCI-க்கு தெரிவிக்கவும் :

UPI பரிவர்த்தனைகள் போன்றவைகளில் தொடர்புடைய பிரச்சனைகள் இருந்தால், NPCI உதவியுடன் நடவடிக்கை எடுக்க கோரவும்.

NPCI வலியுறுத்தும் முக்கியமான கருத்து:

"டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்தத் துறையில் நம்மை மோசடிகளில் இருந்து காப்பாற்றக் கூடியது விழிப்புணர்வும், உரிய நேரத்து செயல்பாடும் தான். உங்களின் நிதியை பாதுகாக்க இந்த அறிவுரைகளை கடைபிடித்து, பாதுகாப்பாக இருப்பது ஒருஒருவரது தனிப்பட்ட கடமை” எனவும் NPCI அறிவுறுத்தியுள்ளது. 

Tags:Digital ArrestScamNPCIOnline ScamOnline Payments