Advertisement
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கர்களை உடைத்து திருட்டு! பலகோடி மதிப்புள்ள நகைகள் மாயம்
உ.பி, லக்னோவில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 42 லாக்கர்களை உடைத்து அதில் உள்ள நகைகளை ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது. இதில் பல கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author: Kanal Tamil Desk
Published: December 23, 2024
Advertisement
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சின்ஹாட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த சனிக்கிழமை அன்று சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் அங்கிருந்த 42 லாக்கர்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான முதற்கட்ட தகவல்களின்படி, 4 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என்றும், இவர்கள் சனிக்கிழமை வங்கியில் யாரும் இல்லை என்பதை அறிந்து வங்கி பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
சுமார் 1.5 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரையில் வங்கியினுள் உள்ளே இருந்து கொண்டே திருட்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. 4 பேர் கொண்ட கும்பல் என சிசிடிவி காட்சிகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. நேற்று, வங்கிக்கு அருகில் உள்ள கடைக்காரர், வங்கி பக்கவாட்டு சுவரில் துளை இருப்பதை பார்த்து உடனடியாக சின்ஹாட் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் அறிந்து உடனடியாக சின்ஹாட் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு விரைந்த போலீசார், பல பிரிவுகளாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து லக்னோ (கிழக்கு) டிசிபி ஷஷாங்க் சிங் கூறுகையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 பேர் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வங்கி சுவற்றை துளையிட்டு திருட்டு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். தடவியல் நிபுணர்கள் குழு, மோப்ப நாய்கள் பிரிவு என 6 பிரிவினர் திருட்டு சம்பவம் குறித்து சோதனை செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சந்தீப் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் உள்ள நகைகளை மட்டுமே அந்த கும்பல் திருடியுள்ளது. வங்கி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் பணம் அப்படியே தான் இருந்தது என தெரிவித்தார்.
இதற்கு முன்னர், மூன்று மாதங்களுக்கு முன்பு வங்கி ஏடிஎம்மில் இதே போல திருட்டு நடைபெற்றதாகவும் , அப்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிடிப்பட்டார்கள் என்றும், தற்போது மீண்டும் அதேபோல வேறுஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது எனவும் வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
No comments yet.