தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொள்ளையரை என்கவுண்டர் செய்து பிடித்த உ.பி காவல்துறை

உ.பி மாநிலம் லக்னோவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவரை போலீசார் என்கவுன்டர் செய்து பிடித்துள்ளனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 23, 2024

லக்னோவின் சின்ஹாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் லாக்கர்களை உடைத்து மர்ம நபர்கள் சிலர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சனிக்கிழமை அன்று வங்கி சுவற்றை துளைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 42 லாக்கர்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்னவென்று தீவிரமாக சின்ஹாட் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த சூழலில், கொள்ளையடித்தவர்களை டிசம்பர் 23 அன்று காலையில் உ.பி போலீசார் என்கவுன்டர் செய்து சுட்டு பிடித்தனர். ​​குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். மேலும் இருவர் தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து லக்னோ (கிழக்கு) காவல்துறை டிசிபி ஷஷாங்க் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற வங்கிக் கொள்ளை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக சின்ஹாட் போலீசார் லவுலாயின் நீர்ப்பாலம் அருகே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது, சந்தேகப்படும் வகையில், இரண்டு கார்கள் வருவதை நாங்கள் பார்த்துவிட்டு உடனே அதனை அப்போது மறித்தோம். 

அப்போது காரில் இருந்த ஒரு நபர் எங்கள் (காவல்துறை) மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அருகில் உள்ள வயல்வெளியில் தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அப்போது நாங்கள் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை கையும் களவுமாக பிடித்தோம். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பீகார் மாநிலம் முங்கேரில் உள்ள சீதகுண்டி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் என எங்களுக்கு தெரிய வந்தது. 

அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதால் அவருக்கு காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக அரவிந்த் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அது மட்டுமின்றி, சம்பவ இடத்தில் இருந்து 315 Bore பிஸ்டல்( துப்பாக்கி ரகம்) மற்றும் நம்பர் பிளேட் இல்லாத வெள்ளை நிற கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம்” எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தின்போது தப்பித்து ஓட்டம் பிடித்த 2 நபர்களை தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

வங்கியில் நகை மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தவர்களை பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தீவிர விசாரணை நடந்து வந்த சூழலில், விசாரணையில், வங்கிகளிலும் சில குறைபாடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த நகைக்கொள்ளை சம்பவம் நடந்தபோது வங்கியில் பாதுகாவலர் யாரும் பணியில் இல்லாதது வங்கி கொள்ளைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்டுகிறது. அதேபோல, வங்கியில் ஆறு சிசிடிவி கேமராக்களில் (2 வெளியில் மற்றும் 4 உள்ளே) ஒரே ஒரு கேமராவில் மட்டுமே திருடர்களின் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 மீதமுள்ள கேமராக்கள் வலுவான அறையை மறைக்கும் வகையில் அமைக்கப்படவில்லை இதன் காரணமாகவும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கொள்வதில் காவல்துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரையும் உ.பி  மாநில போலீசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:UP PolicePolice EncounterLockerJewelsLootRoberryUttar pradeshBank theftIOB