உ.பி வங்கி கொள்ளை : தொடரும் தேடுதல் வேட்டை.. 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
உ.பி மாநிலம் லக்னோவில் சின்ஹாட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Author: Kanal Tamil Desk
Published: December 24, 2024
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் சின்ஹாட் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த டிசம்பர் 21 (சனிக்கிழமை) இரவு ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. சுவற்றில் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளை கும்பல், நகைகள் இருக்கும் வங்கி லாக்கர்களை உடைத்து கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
முதல் என்கவுண்டர் :
மறுநாள் அருகே உள்ள கடைக்காரர், வங்கி சுவற்றில் துளை இருப்பதை அறிந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து, வங்கிக்கு விரைந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கினர். இதில் முதற்கட்டமாக நேற்று சின்ஹாட் பகுதி வாகன சோதனையில், பீகார் மாநிலத்தில் முங்கேரி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்து கைது செய்தனர்.
வாகன சோதனையின் போது, வெள்ளை நிற கரை வழிமறித்த உபி போலீசார், அதில் பயணித்தவர்களை சோதனை செய்துள்ளார். அப்போது தான் அரவிந்த் குமார் காவல்துறை நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்த போது தற்காப்புக்காக அவரது காலில் சுட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் 4 பேர் கைது :
அதன் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணையை தொடர்ந்து மேலும் 4 பேர் பிடிபட்டுள்ளனர். அதில் 2 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அடுத்தடுத்த என்கவுண்டர்கள் :
இதுகுறித்து,லக்னோ காவல்துறை டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், “ லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது என்றும், இதில் மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என்றும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 5 பேர் பிடிபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 23 (திங்கள்) லக்னோ காவல்துறையால், பீகார் மாநிலம் சார்கான் பகுதியை சேர்ந்த சோபிந்த் குமார் என்பவரை பிடிக்க முயலும் போது, அவர் போலீசாரை தாக்க முற்பட்டதாகவும், அதனால் போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார் என்றும்,
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அமலியா பகுதியை சேர்ந்த சன்னி தயாள் என்பவர் காஜிபூரில் எல்லையைத் தாண்டி பீகாருக்கு தப்பி செல்ல முயன்ற போது போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார். என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன என்றும், இவர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சிறையில் ஒன்றாக இருந்தபோது லக்னோ வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர மேலும் 2 பேர் கைதாகியுள்ளனர்.
7 பேர் கொண்ட கும்பல் :
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொள்ளையில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் பிடிபட்டதாகவும் , அதில் 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டதாகவும், 2 பேரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்ஹாட் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 42 லாக்கர்களில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments yet.