- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பெண் வங்கி ஊழியரை வீடியோ காலில் மிரட்டிய மோசடி கும்பல்! சரியான நேரத்தில் காப்பாற்றிய காவல்துறை!
மத்திய பிரதேசத்தில் பாங்க் ஆப் இந்தியா பெண் வங்கி ஊழியர் ஒருவரை ஆன்லைன் மோசடி கும்பல் ‘டிஜிட்டல் கைது’ செய்துள்ளது. இதனை அறிந்த உண்மையான போலீசார், அவரை மோசடியில் சிக்காமல் மீட்டுள்ளனர்.

Author: Kanal Tamil Desk
Published: January 8, 2025
ஆன்லைன் மோசடி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை வழிகளையும் அரசு கூறி வருகிறது. அப்படி இருந்தும் மோசடி சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அண்மையில் கூட மத்திய பிரதேசத்தில் பெண் வங்கி ஊழியரை ஒரு ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்ற துணிந்துள்ளது. நல்வாய்ப்பாக அதனை உண்மையான காவல்துறை அதிகாரிகள் சரியான நேரத்தில் தடுத்துள்ளனர்.
என்ன நடந்தது?
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) மாலை, மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் கோலார் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவி மேலாளர் பிரனாலி டிக்கார் என்பவர் தன்னுடைய வீட்டிலிருந்தபோது சைபர் குற்றவாளிகள் அவரை குறி வைத்து மோசடியில் ஈடுபட முயற்சி செய்தனர். அன்று சரியாக மாலை 4:30 மணியளவில் பிரணாலிக்கு தெரியாத ஒரு மொபைல் எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை எடுத்து பார்த்தவுடன், " நான் குற்றப்பிரிவு அதிகாரி" என மோசடி நபர் நடித்துள்ளார்.
பின் ஆதார் அட்டை, பான் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி ரூ 2.56 கோடி மதிப்பிலான பணமோசடி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பிரனாலி மீது அந்த கும்பல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்டவுடன் அதிர்ச்சியான பிரனாலி அப்படியெல்லாம் இல்லை என கூறி அந்த பொய் குற்றசாட்டை முழுதாக மறுத்துள்ளார்.
பிறகு பிரனாலியை நம்ப வைப்பதற்காக வீடியோ கால் மூலம் அழைத்து, அதிகாரிகள் போல உடை அணிந்துகொண்டும் அந்த குற்றவாளிகள் நடித்துள்ளனர். அத்துடன் உங்களிடம் விசாரணை செய்யவேண்டும் வீட்டை விட்டு வெளியே போகவேண்டாம் என டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்து பிரனாலியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன பிரனாலி அவர்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே கேட்டுக்கொண்டார்.
மாமியார் செய்த சம்பவம் :
மருமகள் பிரணாலி தனியாக பதட்டமாக இருப்பதை பார்த்து சந்தேகப்பட்ட அவரது மாமியார், இச்சம்பவம் குறித்து உடனடியாக உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுக்க, அந்த உறவினர் உடனடியாக கோலார் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசாருடன் பிரணாலியின் வீட்டிற்கு சென்றார்.
தப்பியோடிய (போலி) போலீஸ் :
இருப்பினும், பிரனாலி பயந்துகொண்டு குற்றவாளிகள் உண்மையாகவே அதிகாரிகள் என நினைத்து அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன்பிறகு கதவை திறந்த உண்மையான போலிஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தவுடன், வீடியோ காலில் இருந்த குற்றவாளிகள் ‘கட்’ செய்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் நடந்தவற்றை பிரனாலி உண்மையான காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
போலீசார் விசாரணை :
இந்த சம்பவத்திற்கு பின்னர், பிரணாலி கொடுத்த புகாரின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் குறித்த விசாரணையை சைபர் பிரிவு காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.