- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வணக்கம் டெல்லி., நாடளுமன்றம் முன்பு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
2 நாள் வங்கி வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிறுத்தி இன்று (மார்ச் 3, 2025) டெல்லி நாடாளுமன்றம் முன்பு வங்கி ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Author: Kanal Tamil Desk
Published: March 3, 2025
வாரத்தில் 5 நாட்கள் வேலை, வங்கி காலிப்பணியிடங்களில் போதுமான ஆட்சேர்ப்பு, வங்கி ஊழிர்கள் மீதான தாக்குதல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி United Forum of Bank Unions (UFBU) தலைமையில் AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிறுத்தி சமூக வலைத்தளங்கள் வாயிலாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பிரபலப்படுத்துவது, கருப்பு பேட்ஜ் அணியும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், இன்று மார்ச் 3 (திங்கள்) அன்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது போல டெல்லி பாராளுமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கத்தினர் நடத்தினர்.
ஏற்கனவே, எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் #UnitedWeStand எனும் ஹேஸ்டேக் மூலம் தங்கள் கோரிக்கைளை முன்னிறுத்தி பதிவிட்டனர். இந்த ஹேஸ்டேக் இதுவரை சுமார் 3 லட்சம் பதிவுகளை கடந்தது என AIBEA சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்திருந்தனர்.
வரும், பிப்ரவரி 28, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று அனைத்து வங்கி ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல AIBEA அழைப்பு விடுத்து இருந்தது. அனைத்து கிளை அலுவலகங்களுக்கும் பேட்ஜ்கள் வழங்கப்படுவதை அனைவரும் உறுதிசெய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த பிப்ரவரி 28இல் வங்கி ஊழியர்கள் பெரும்பாலானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதனை அடுத்து, இன்று (மார்ச் 3, 2025) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்ததன் படி இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிறுத்தி “வணக்கம் டெல்லி (Chalo Delhi)” எனும் பெயரில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் UFBU, AIBEA என பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.