25 நிமிட விளம்பரங்கள்.., PVR தியேட்டருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!
குறிப்பிட்ட நேரத்தில் படத்தை தொடங்காமல், 25 நிமிடங்களுக்கு விளம்பரங்களை ஒளிபரப்பி தாமதமாக திரைப்படத்தை ஒளிபரப்பிய PVR சினிமாஸ்-க்கு அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்.

Author: Santhosh Raj KM
Published: February 20, 2025
கடந்த, 26 டிசம்பர் 2023-ல் அபிஷேக் என்பவர் பூக் மை ஷோ ( Book My show ) இணையதளம் மூலம் பெங்களூரு பிவிஆர் (PVR) சினிமாஸில் சாம் பகதூர் திரைப்படம் காண மாலை 4.05க்கு முன்பதிவு செய்தார். ஆனால் படம் ஆரம்பித்தது 4.30 மனிக்கு தான். சுமார் 25 நிமிடங்கள் விளம்பரங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக் பிவிஆர் (PVR) மீதும் பூக் மை ஷோ ( Book My Show) மீதும் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மனுவை 06.01.2025-ல் தாக்கல் செய்கிறார்.
மனுவில் குறிப்பிடப்பட்டவை..,
"ஐயா நான் பெங்களூரு PVR சினிமாஸில் மேற்குறிப்பிட்ட தேதியில் 3 டிக்கெட் புக் செய்திருந்தேன். மாலை 6.30 மணிக்கு பிறகு எனக்கு அலுவலக வேலைகள் இருந்தன. ஆனால், படம் தாமதமாக தொடங்கப்பட்டு, தாமதமாக முடிக்கப்பட்டதால் என்னால் அலுவலக வேலையை செய்ய முடியவில்லை. இதனால் எனக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் வேலையில் அமராததால், நிர்வாகத்திடம் இருந்து அவப்பெயர் வாங்கும் நிலைக்கு சென்றுள்ளேன். இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
PVR-INOX எதிர் மனு தாக்கல் :
PVR-INOX, "சமூக அக்கறையின் அடிப்படையில் சில விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்ப எங்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே, இந்த மனு தேவையில்லாதது. உடனடியாக இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தது.
நீதிபதியின் உத்தர்வு :
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 15.02.2025 அன்று அளித்த தீர்ப்பில், "தியேட்டருக்கு வருபவர்கள் காசு கொடுத்து படத்தைதான் பார்க்க வருகிறார்கள். விளம்பரங்களை அல்ல. அதனால், விழிப்புணர்வு விளம்பரங்களை படம் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் வரை ஒளிபரப்பினால் போதும். அதேபோல, இடைவெளி நேரத்தில் விளம்பரங்களை போட்டுக்கொள்ளுங்கள். ஏன் படம் தொடங்கும் நேரத்தில் 25-30 நிமிடங்களுக்கு விளம்பரங்களை போட வேண்டும்? நேரம் பொன் போன்றது. இன்று இருக்கின்ற பரபரப்பான சூழலில், ஒருவரை 30 நிமிடங்கள் வரை எதுவும் செய்யாமல் உட்கார வைத்து விளம்பரங்களை பார்க்க வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக ரூ.50 ஆயிரம் தொகையை மனுதாரர் அபிஷேக்குக்கு வழங்க வேண்டும். அதேபோல வழக்கு தொகைக்காக ரூ.5 ஆயிரம் மற்றும் மன வேதனைக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.65 ஆயிரம் வழங்க வேண்டும். தவிர, ரூ.1 லட்சம் தொகையை நீதிமன்றத்திற்கு அபராதமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டனர்.
இதில், டிக்கெட் முன்பதிவு தளம் புக் மை ஷோ ( BookMyShow) விளம்பரங்களின் நேரத்தை கட்டுப்படுத்தாது என்பதால், அது எந்த தொகையையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
No comments yet.