- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இந்தியாவில் டெஸ்லா வருகை: "எலோன் மஸ்க் வெற்றிபெற முடியாது" JSW தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் பளிச்.!
இந்தியாவின் மின்சார வாகன சந்தையை எலோன் மஸ்க் ஒருபொழுதும் உடைக்க முடியாது என்று JSW குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

Author: Gowtham
Published: March 6, 2025
இந்திய சந்தையில் மின்சார கார்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் இந்த விருப்பத்தை கண்டு, வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இந்திய சந்தையில் நுழைய ஆர்வமாக உள்ளன.
அந்த வகையில், அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க் தனது மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தொழிலை இந்தியாவில் தொடங்கத் தயாராக உள்ளார். மிக விரைவில் டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் இந்தியாவில் விற்பனையைத் தொடங்குவுள்ளது. இதற்காக, இந்தியாவில் ஒரு ஷோரூமைத் திறப்பதற்கான குத்தகை ஒப்பந்தத்திலும் டெஸ்லா கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JSW குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் டெஸ்லாவின் இந்தியாவுக்குள் நுழைவது குறித்து தனது எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, 'மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் மின்சார வாகன சந்தையை கைப்பற்றுவதற்கு முன், இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை டெஸ்லாவை வெல்ல முடியாத அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளன' என்று அவர் எடுத்துரைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "எலோன் மஸ்க் இங்கே இல்லை, அவர் அமெரிக்காவில் இருக்கிறார். நாங்கள் இந்தியர்கள் இங்கே இருக்கிறோம். டாடாவும் மஹிந்திராவும் செய்யக்கூடியதை அவரால் செய்ய முடியாது".
"மஹிந்திரா மற்றும் டாடாவால் செய்யக்கூடியதை அவரால் செய்ய முடியாது, அது சாத்தியமில்லை. ஒருவேளை அதிபர் டிரம்பின் கீழ் அமெரிக்காவில் வேண்டுமெனில் இதைச் செய்ய முடியும். அவர் மிகவும் புத்திசாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அவர் விண்கலம் போன்ற பல்வேறு விஷயங்களைச் செய்கிறார். அவர் அற்புதமான பணிகளைச் செய்துள்ளார், ஆனால் இந்தியாவில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல" என்று கூறினார்.
JSW குழுமத்தின் பரிணாமம்
கடந்த ஆண்டு JSW குழுமம் MG மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து JSW MG மோட்டார் இந்தியா என்ற புதிய கூட்டு முயற்சியைத் தொடங்கியது. அதன் பிறகு எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் கவனம் மின்சார வாகனங்களில் அதிகரித்துள்ளது. சமீபத்தில், நிறுவனம் தனது புதிய மின்சார காரான MG Windsor-ஐ ஈவி சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Tata மற்றும் Mahindra-வின் மின்சார வாகன வரிசையுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இது தவிர, நாட்டின் முதல் மின்சார ஸ்போர்ட்ஸ் காரான எம்ஜி சைபர்ஸ்டரை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவும் நிறுவனம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் டெஸ்லா ஷோரூம்
அண்மையில், டெஸ்லா தனது முதல் ஷோரூமை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) திறப்பதற்கான ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் கீழ், நிறுவனம் பி.கே.சி.யில் உள்ள ஒரு வணிக கோபுரத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. அதன் மாத வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.900 என்று கூறப்படுகிறது. அதாவது மாதத்திற்கு சுமார் 35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் சரியாக நடந்தால், டெஸ்லா நிறுவனம் ஏப்ரல் முதல் கார்களை விற்பனை செய்யத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையைத் தவிர, இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும் ஒரு ஷோரூமைத் திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதற்காக, டெல்லியின் ஏரோசிட்டியில் ஒரு ஷோரூமுக்கு இடம் தேடுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.