திமுக முன்னாள் அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்த்தின் குடும்பத்திரனருக்க எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையைத் துவங்கும்படி சேலம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Author: Santhosh Raj KM
Published: April 10, 2025
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.80 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வேளாண் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 606 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, மறைந்த
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா மற்றும் மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக 2004-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து 2006-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதுஇதற்கிடையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்து விட்டார். அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், சொத்து, நிதி பரிவர்த்தனைகள் குறித்த ஆவண ஆதாரங்களுடன் தான் வழக்குப் பதிவு செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.
சொத்துக்கள் தங்கள் சொந்த சம்பாத்தியம் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த சொத்துக்கள் சொந்தமாக சம்பாதித்தவையா இல்லையா என்பதை முழுமையான சாட்சி விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு எனக் கூறி, சேலம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் , குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையைத் துவங்கும்படி சேலம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
No comments yet.