தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / தமிழ்நாடு

'மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது' - உச்ச நீதிமன்றம்.!

ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் அரசியல் சாசனப்பிரிவு 142-ன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்.

News Image

Author: Santhosh Raj KM

Published: April 9, 2025

தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் எதிராகவும், வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிய வழக்கில் ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று  நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

நீதிபதியின் தீர்ப்பு

அரசியல் சாசன பிரிவு 200ன் படி ஆளுநருக்கு எந்த மாதிரியான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவர் பிரிவு 200ன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை வெகு விரைவாக பின்பற்ற வேண்டும்.

முழுமையான வீட்டோ" அல்லது "பாக்கெட் வீட்டோ" என்ற கருத்து அரசியலமைப்பில் இடம் பெறவில்லை. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் அது அவரது கடமை.ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. பிரிவு 200 ன் கீழ் முழுமையான தன்னிச்சை அதிகாரம் அனுமதிக்கப்படவில்லை.

சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பின்னர் மசோதாக்கள் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்க முடியாது. இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட மசோதா முன்பே சமர்பிக்கப்பட்ட மசோதாவை விட வேறுபட்டால் மட்டுமே விதிவிலக்காக கருத முடியும் குடியரசு தலைவருக்கு அனுப்ப ஒதுக்க முடியும். மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்தால் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.

மாநில அரசின் ஆலோசனைக்கு மாறாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நிறுத்தி வைத்தால், ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். ஆனால் பொது விதியாக, ஆளுநர் ஒரு மாநில அரசின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும். 

ஆளுநருக்குக் தனது விருப்ப உரிமையை செயல்படுத்த முடியாது அதற்கு அரசியலமைபு இடமளிக்கவில்லை. ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அது அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும்.

10 மசோதாக்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியலமைப்பு 200ன் கீழ் ஆளுநரின் முடிவு என்பது நீநிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே. மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசு தலைவர் பரிசீலிக்க ஒதுக்குவது சட்டவிரோதமானது. மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும்

அதுமட்டுமின்றி ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்று பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர்

இந்த வழக்கு குறித்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘’வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்ட விரோதம் என்றும், அந்த சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

இது வழக்கு குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்ஆளுநர்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், ஆளுநர்களின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை சொல்லியுள்ளது'' என்று கூறினார்.

கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவில்

தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் தளத்தில்

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
 

Tags:indianconstitutionMK StalinGovernorRN RaviStateautonomyTamilnadu Leads