Advertisement
பொதுக்கூட்டங்களுக்கு அரசியல் கட்சிகளிடம் கட்டணம் வசூலிக்கலாம் - உயர் நீதிமன்றம் உத்தரவு.!
இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில், பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டண நிர்ணயம் செய்து அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 15, 2025
Advertisement
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும் என்ற பெயரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவ விழா, முகூர்த்த நாள் என்பதால் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
Advertisement
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,இனிவரும் காலங்களில் பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில், பாதுகாப்பு வழங்குவதற்காக உரிய கட்டண நிர்ணயம் செய்து அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்
போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டம் அந்த இடத்தில் நடைபெறுவதாக கூறினார்.
காவல்துறை தரப்பு வழக்கறிஞர்
கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவ விழா காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டது. பேரணி நடத்த எந்த கட்சிக்கும் அனுமதியில்லை என்று தெரவித்தார்.
நீதிபதியின் தீர்ப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சீமான் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குகிறோம். பேரணியை மாலை 5 மணிக்கு தொடங்கி 6 மணிக்குள் முடிக்க வேண்டும். அதற்கு மேல் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம். பேரணி, பொதுக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்.
கட்சியினர் தினமும் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு தருவது போலீசாரின் பணி அல்ல. இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடைப்பெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக கட்டண தொகையை நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும்,"என உத்தரவிட்டார்.
No comments yet.