தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்கத்திற்கு இடைக்கால தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கம் செய்த அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: March 11, 2025

காப்புரிமை சட்டத்தை மீறியதாக 2010-ல் வெளியான 'எந்திரன்' படத்திற்கு பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. இந்நிலையில் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2010ஆம் ஆண்டு அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில், பிரமாண்டமாக படமாக 'எந்திரன்' வெளியானது. இந்த படத்தைப் பார்த்த ஆரூர் தமிழ்நாடன் இது நான் எழுதிய கதை 1996-ல் நக்கீரன் குழும இதழான 'இனிய உதயம்' இதழில், ரோபோவை மையமாக வைத்து 'ஜூகிபா' என்ற கதையை எழுதினேன். இதே கதை 2007-ல் வெளியான அவரது 'திக்திக் தீபிகா'என்ற கதைத் தொகுப்பிலும் வெளியானது என அவர் கூறியதை தொடர்ந்து தமிழ்நாடன், தனது கதையான ஜூகிபாவைத் திருடி, எந்திரன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக  குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து இயக்குநர் ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேநேரத்தில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றும் ஆரூர் தமிழ்நாடன் சார்பில் தொடரப்பட்டது.

உரிமையியல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதில் ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதேநேரம் எழும்பூர் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் ஷங்கர் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 11) விசாரணைக்கு எடுத்து கொல்லப்பட்டது.

கடந்த மாதம் பிப்.17ஆம் தேதி இந்த வழக்கில் அமலாக்கத்துறை, இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்தில் ஊதியமாக பெற்ற 10.11 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கம் செய்து இருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இயக்குநர் ஷங்கர் தரப்பில் வாதம் : 

ஏற்கனவே இது தொடர்பான உரிமையியல் வழக்கு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டது தவறு' என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில்.., 

 'தனிநபர் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது' என தெரிவிக்கப்பட்டது.

விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள்

அமலாக்கத்துறையின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'சொத்துக்களை முடக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது' என தெரிவித்து, சொத்து முடக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இயக்குநர் ஷங்கரின் மனுவிற்கு ஏப்ரல் 21ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Tags:Kalanidhi maranDirector ShankarEnthiranMadras High court