- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
நாக்பூரில் வெடித்த கலவரம்: காரணம் என்ன? 14 பேர் படுகாயம்... 15 பேர் கைது!
முதலில் போராட்டம் அமைதியாக நடந்து கொண்டிருக்க, பின்னர் ஔரங்கசீப்பின் உருவ பொம்மை (அல்லது) புனித நூலை எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது.

Author: Gowtham
Published: March 18, 2025
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய போராட்டத்தின் போது ஒரு சமூகத்தின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, மத்திய நாக்பூரில் நேற்று இரவு 7 மணிக்குப் பிறகு வன்முறை வெடித்தது.
நாக்பூரில் கலவரம் மூண்டதற்கு 'சாவா' திரைப்படமே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சாவா படத்தை குறிப்பிட்டு, அவுரங்கசீப்பை புகழ்ந்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி கோஷமிட்டதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இது முதலில் அமைதியாக இருந்தாலும், ஔரங்கசீப்பின் உருவ பொம்மை (அல்லது) புனித நூலை எரித்ததாக வதந்தி பரவியதால், வன்முறை மூண்டு கலவரமாக வெடித்தது. அந்த வதந்தி உண்மையா என்பதற்கு ஆதாரம் இல்லை என்றாலும், இந்த செய்தி உடனடியாக பரவ தொடங்கி சிறுது நேரத்திலேயே பெரும் கூட்டத்தை திரட்டியது.
இதன் விளைவாக, இரு சமூகங்களுக்கு இடையே மோதல் தீவிரமடைந்து, கல்வீச்சு, வாகனங்கள் தீவைப்பு, கடைகள் மற்றும் வீடுகள் சேதப்படுத்துதல் போன்ற வன்முறைகள் பரவின. இது ஒரு பக்கம் மறுபக்கம், அங்கு மத பதற்றம் மேலும் அதிகரிக்க காரணம், இப்பகுதியில் ஏற்கனவே இருந்த சமூக பிரிவினைகள் மற்றும் அரசியல் தூண்டுதல்கள் தான் என்கிறார்கள்.
144 தடை உத்தரவு
மஹால் பகுதியில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் சிலை அருகே தொடங்கிய இந்த கலவரம், சிட்னிஸ் பூங்கா, கோட்வாலி, கணேஷ்பேத் மற்றும் ஹன்சபுரி போன்ற பகுதிகளுக்கு பரவியது. இதை அடக்க, காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுகளையும் தடியடியையும் பயன்படுத்தியது, மேலும் பிரிவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 14 போலீசார் காயமடைந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாக்பூரில் பதற்றமான பகுதிகளில் நாக்பூர் காவல்துறை ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. அந்தப் பகுதிகளில் யாரும் வெளியே செல்ல முடியாது. சுமார் 10 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அடுத்த உத்தரவு வரும் வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்.
நாக்பூர் காவல்துறை இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறது. குற்றவாளிகளின் முகங்கள் சிசிடிவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நாக்பூர் காவல்துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல்வர் வேண்டுகோள்
இதற்கிடையில், மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார்."கலவரம் செய்பவர்கள், பதற்றம் உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாக்பூரில் நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாக்பூரின் அமைதி காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
காவல்துறையினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், நாக்பூர் ஒரு அமைதியான நகரம், அங்கு மக்கள் ஒருவருக்கொருவர் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது எப்போதும் நாக்பூரின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.