தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுகள் : தமிழக அரசின் கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: February 27, 2025

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடை  பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்கு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும் என்றும், அதேநேரம்  ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட  விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக தமிழக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என கடந்த 2023 நவம்பரில் உத்தரவிட்டது.

அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாத வகையில் நேரக்கட்டுப்பாடு, ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதுக்கு குறைவானவர்கள் விளையாட தடை விதித்தும், தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும்போது ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும் என்றும், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்து மட்டுமே விளையாட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதித்தும் தமிழக அரசு புதிதாக விதிகளை வகுத்து கடந்த பிப்ரவரி 14 அன்று அரசிதழில் வெளியிட்டது.

 தமிழக அரசின் இந்த விதிகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக்க கோரி ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எகஸ்பர்ட் ப்ளேயர்ஸ் சங்கம் உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் பிப்ரவரி 26-ல் விசாரணைக்கு வந்தன.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில்.., 

ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தவும், விளையாடுபவர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. தனியார் கேளிக்கை விடுதிகள் மற்றும் கிளப்களில் ரம்மி விளையாட எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விளையாட நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பது பாரபட்சமானது. 

மேலும், ஆதார் இணைப்பை அரசின் நலத் திட்டங்களுக்கு மட்டுமே கட்டாயப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு ஆதார் கட்டாயம் என்கிறது. இதனால் தனிநபர் அந்தரங்க உரிமையும் பாதிக்கும். எனவே, தமிழக அரசின் விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என வாதிட்டார்கள்

தமிழக அரசு தரப்பில் வாதம்

ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்களது சொத்துகளை இழந்து தற்கொலையும் செய்து கொண்டதால்தான் தமிழகத்தில் இந்த விளையாட்டுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசின் சூதாட்ட தடை சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. 

உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே புதிதாக விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தான் அதிகமான இளைஞர்கள் ஆன்லைனில் விளையாடுவதாக நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே வயது, நேரக் கட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசு விதிகளை அமல்படுத்தியுள்ளது. இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என வாதிட்டனர்

நீதிபதிகள் உத்தரவு : 

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:Online gamesMadras High courtTN GovtCentral Government