பொன் மாணிக்கவேல் வழக்கு! பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
சிலைக்கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Author: Santhosh Raj KM
Published: May 5, 2025
தமிழ்நாட்டில் நடைபெற்ற சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், அவர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது சிலை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான தீனதயாளன் என்பவரை வழக்கில் இருந்து தப்பவைக்க உதவியதாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பொன் மாணிக்கவேலின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரியும் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிப்பதால் விசாரணை தடைபடுவதாகவும் சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிபிஐ தரப்பு :
அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றம் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொன்.மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். பொன்.மாணிக்கவேல் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளிக்கவும் தடை விதிக்க வேண்டும். அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் பேட்டி அளிக்கும் போது சிபிஐக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இது போன்று அவர் பேசுவது வழக்கின் விசாரணையை பாதிக்கும் வகையில் இருக்கிறது. திசைதிருப்பும் வகையிலும் இருக்கிறது. எனவே பொன்.மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகளிடம் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதியின் உத்தரவு :
பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். மேலும், சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை உள்ளிட்டவை தொடர்பாக பத்திரிகை, ஊடகங்களுக்கு மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கும் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிக்க கூடாது என்ற தடையையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
மேலும் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் 4 வார காலத்திற்குள் பொன் மாணிக்கவேல் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 6 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு அடுத்தகட்ட உத்தரவை பிறப்பிக்கப்படும் என்றனர் நீதிபதிகள்.
No comments yet.