பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு.!
சைவம் மற்றும் வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: April 16, 2025
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 6-ந்தேதி திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியிடம் இருந்தும் பொன்முடியின் இந்தப் பேச்சுக்கு எதிராக கண்டனக் குரல் ஒலித்தது. இந்நிலையில், திமுகவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார்.இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில்
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது எனவும், குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல எனவும், மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளித்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பதவி பிரமாணத்தை மீறி செயல்பட்ட அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet.