- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தமிழ்நாடு அரசு தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு!
2020 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Author: Santhosh Raj KM
Published: February 26, 2025
2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட தற்காலிக ஊழியர்களை நியமித்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருபவர் சத்யா. 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் பணி வரன்முறை செய்யக்கோரி சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரத்தில் பணி வரன்முறை செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் பிப்ரவரி 25-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி :
இந்த வழக்கு விசாரணையின்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தலைமை செயலாளர் சார்பாக…
"2020-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன், தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்தது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர். இந்த உத்தரவு தற்காலிக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.