தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

“தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க தடை இல்லை” - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

தங்கள் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News Image

Author: Santhosh Raj KM

Published: February 12, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 10, 2025 அன்று தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்குவது குறித்த பொதுநல வழக்கு ஒன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், தமிழ்செல்வி மற்றும் சுந்தர்மோகன் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கானது முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் நோக்கம் : 

தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தண்டனை கைதிகள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ அதன் விசாரணை நிலுவையில் இருக்கும் பொழுது, சிறைக்கைதிகள் சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க தடை விதிக்கக்கூடாது என கோரியிருந்தனர்.

வழக்கு விசாரணை : 

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகினார். 

கேள்வி : தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் அல்லது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு அளிக்க முடியுமா? 

பதில் (வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா) :  மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசர கால விடுப்பு வழங்க சிறை அலுவலர்களுக்கு தடை ஏதும் இல்லை.

கேள்வி : தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்கும் போது, தண்டனை காலத்தை கைது செய்யப்பட்ட நாளில் இருந்து கணக்கில் எடுக்க முடியுமா? 

பதில் (வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா) :  சிறை தண்டனை என்பது கீழமை நீதிமன்றம், தண்டனை வழங்கிய நாளிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

கேள்வி : விசாரணைக்காலத்தில் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள முடியுமா? 

பதில் (வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா) : விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.  

மேலும், “தண்டனை கைதிகள் மீது வேறு வழக்குகள் விசாரணையில் இருந்தால், விடுப்பு வழங்க முடியாது. விடுப்பு வழங்குவது குறித்த அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.” என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.

வழக்கின் தீர்ப்பு : 

அரசு வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, கைதிகளின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தியது. 

விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும்போது, கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நாள் மற்றும் தண்டனைக்கு முன் சிறையில் இருந்த விசாரணை நாட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும், தண்டனைக் கைதிகளுக்கு எதிராக வேறு வழக்கு நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்தால், அந்த கைதி விடுப்பு பெற தகுதியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து விதிகளுக்கும் விலக்கு அளிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், தமிழ்செல்வி மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

Tags:JudgementMadras high courtChennai