“இது மனித உரிமை மீறல்” ஜாமீன் கைதிகளுக்காக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
ஜாமின் கிடைத்த பிறகு எந்த கைதியும் சிறையில் இருப்பதை தவிர்க்குமாறு சிறை அதிகாரிகள் மற்றும் சட்டப் பணிகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Author: Santhosh Raj KM
Published: March 25, 2025
ஆங்கில நாளிதழ் செய்தியில் சுமார் 800க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைத்தும், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து இதுகுறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் சுமார் 800க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக, DT நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் சார்பில்
தமிழகம் முழுவதும் 153 விசாரணைக் கைதிகளும், 22 தண்டனைக் கைதிகளும், ஜாமீன் கிடைத்தும் பிணை செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை எனவும், மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ஜாமீன் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
நீதிபதியின் உத்தரவு
மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஜாமீன் கிடைத்தும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது மனித உரிமை மீறல் என குறிப்பிட்டு, கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அவர்களை விடுதலை செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கு உத்தரவிட்டனர்.
No comments yet.