- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மகளிர் தினம்: முதல் முறையாக பிரதமரை பாதுகாக்கப்போகும் பெண்கள்! குஜராத் அரசு செய்யும் சிறப்பு!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாளை நவ்சாரியில் நடக்கும் நிகழ்வின்போது பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் பெண்கள் மட்டும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Author: Gowtham
Published: March 7, 2025
மகளிர் தினத்தன்று பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தனது சமூக வலைதள கணக்குகளை அவர்களிடம் ஒப்படைக்கப் போவதாக பிரதமர் மோடி முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் நவ்சாரியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் பங்கேற்கவுள்ள நிலையில், அவரது பாதுகாப்புப் பணியில் பெண் போலீசார் மட்டுமே ஈடுபடவுள்ளனர்.
ஆம்... இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான நாளை குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்விற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்க பெண் காவல்துறையினர் மட்டுமே கையாளும் என்று அம்மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்வி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷ் சங்வி, “சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, குஜராத் காவல்துறை ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்து வருகிறது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பிரதமரின் நிகழ்ச்சியின் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெண் போலீசாரால் கையாளப்படும். நவ்சாரியின் வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் அவர் வந்ததிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பெண் போலீசார் பணியில் ஈடுபவார்கள்" என்று கூறினார்.
அதன்படி, 2,300க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குஜராத் காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும், மூத்த அதிகாரிகள் முதல் தரைமட்ட ஊழியர்கள் வரை, இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
பாதுகாப்பில் ஈடுப்படும் பெண் காவல்துறை பட்டியல்
2,100 பெண் காவலர்
187 துணை ஆய்வாளர்கள்
61 காவல் ஆய்வாளர்கள்
16 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP-கள்)
5 காவல் கண்காணிப்பாளர்கள் (SPs)
1 காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி.)
1 கூடுதல் காவல் இயக்குநர் (ADGP) ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி மார்ச் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை (மார்ச் 8 ஆம் தேதி) வான்சி போர்சி கிராமத்தில் நடைபெறும் 'லக்பதி தீதி சம்மேளனம்' நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.