- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
உலக சிட்டுக்குருவிகள் தினம்: இந்த பறவை இனம் ஏன் அழிந்து வருகின்றன?
சிட்டுக்குருவிகள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் குறைவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினத்தை உலகம் கொண்டாடுகிறது.

Author: Gowtham
Published: March 20, 2025
உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிட்டுக்குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவை இனங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும்.
சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும், குறிப்பாக மனிதர்கள் வாழும் பகுதிகளில் மிகவும் பரவலாகக் காணப்பட்டன. ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக இவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.
இந்த சிறிய பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள், நகரமயமாக்கல், மாசுபாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு, உணவு தட்டுப்பாடு மற்றும் கூடு கட்டுவதற்கான இடங்களின் பற்றாக்குறை போன்றவை சிட்டுக்குருவிகளின் வாழ்விடத்தை பாதித்துள்ளன.
இதற்கு பல காரணங்கள் உள்ளன, இதனை சமாளிக்க பல்வேறு பாதுகாப்பு முயற்சிகள் உலகளவிலும், இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
வாழ்விடம் அழிவு
சிட்டுக்குருவிகள் பொதுவாக மனிதர்களுடன் நெருக்கமாக வாழும் பறவைகள். பழைய கட்டடங்களின் பிளவுகள், மரங்கள், புதர்கள் போன்றவை இவற்றின் கூடு கட்டுவதற்கு உகந்த இடங்களாக இருந்தன. ஆனால், நவீன நகரமயமாக்கல் காரணமாக
பழைய மண் மற்றும் செங்கல் வீடுகள் இடிக்கப்பட்டு, கண்ணாடி மற்றும் கான்கிரீட் கட்டடங்களாக மாறியுள்ளன.
இவை கூடு கட்டுவதற்கு ஏற்றவையல்ல என்கின்ற ஆராய்ச்சியாளர்கள். பூங்காக்கள், மரங்கள் மற்றும் தோட்டங்கள் குறைந்து, இவற்றின் இயற்கை வாழிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
உணவு பற்றாக்குறை
சிட்டுக்குருவிகள் முதன்மையாக தானியங்கள், புழுக்கள் மற்றும் சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஆனால், இன்றயை காலகட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், புழுக்கள் மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நகரங்களில் தானியங்கள் அல்லது உணவு எச்சங்கள் கிடைப்பது குறைந்து, சுத்தமான சூழல் பராமரிப்பு இவற்றின் உணவு ஆதாரத்தை பாதித்துள்ளது.
மாசுபாடு
இதற்கு ஒலி மாசுபாடும், காற்று மாசுபாடும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆம், நகரங்களில் அதிகரித்து வரும் வாகன சத்தம் மற்றும் பரபரப்பு சிட்டுக்குருவிகளின் தொடர்பு மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகளை பாதிக்கிறது. மேலும், மோசமான காற்றின் தரம் இவற்றின் ஆரோக்கியத்தை பாதித்து, உயிரிழப்பு விகிதத்தை அதிகரித்துள்ளது.
போட்டி மற்றும் வேட்டையாடல்
பிற ஆக்கிரமிப்பு பறவை இனங்கள் (எ.கா., புறாக்கள், மைனாக்கள்) உணவு மற்றும் கூடு கட்டும் இடங்களுக்காக சிட்டுக்குருவிகளுடன் போட்டியிடுகின்றன. அதுமட்டுமின்றி பூனைகள், பருந்துகள் போன்ற இயற்கை வேட்டையாடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இவற்றின் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது.
தொழில்நுட்ப தாக்கம்?
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு (Electromagnetic Radiation) சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கம் மற்றும் திசை அறியும் திறனை பாதிக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இது இன்னும் அறிவியல் பூர்வமாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.
பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள், மழைப்பொழிவு மாற்றங்கள் ஆகியவை சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க காலத்தையும் உணவு கிடைப்பதையும் பாதிக்கின்றன.
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு முயற்சிகள் :
- உங்கள் வீட்டில் ஒரு சிறிய கூடு பெட்டியை அமைப்பது.
- தோட்டங்களை பராமரித்து, தண்ணீர் மற்றும் தானியங்களை வைப்பது.
- பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, இயற்கையான தோட்டத்தை பராமரிப்பது. பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பது.
இந்த முயற்சிகள் மூலம், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க முடியும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நம்பிக்கையாக உள்ளது. இது நமது சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதற்கும் உதவுக்கூடும்.